கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட்: 11 அணைகள் திறப்பு!

0
422

கேரளாவில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை கருதி, 11 அணைகள் திறப்பு.

கேரளாவில் மீண்டும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை கருதி, 11 அணைகள் திறந்து விடப்பட்டுள்ளன.

தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு முதல் மாலத்தீவு வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

இந்த மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், தொடர்ந்து 36 மணி நேரத்தில் புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாறு, அருவிக்கரை, தேபாறை, பொன்முடி, பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பம்பா, சிமினி, சோலையார், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மங்கலம், போத்துண்டி, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மாடுவெட்டி உள்பட 11 அணைகள் திறக்கப்பட்டு உள்ளது.

இதனிடையே இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்து வருவதால் அந்த 2 மாவட்டங்களுக்கும் வருகிற 7-ஆம் தேதி வரை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இடுக்கி, மூணாறு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட வெள்ள நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட தொடங்கி உள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து கேரள வானிலை ஆய்வு மைய இயக்குநர் சந்தோஷ் கூறுகையில் ‘கேரளாவில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இரண்டு மாவட்டங்களில் 210 மிமீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here