பெரம்பலூரில் 6 மாதத்திற்கு முன்பே குவாரிகள் யாருக்கு என்று முடிவு செய்யப்பட்டுவிட்டதாக ஆளுங்கட்சியினர் பேச்சு

0
657

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கல்குவாரிகளுக்கான பொது ஏலத்தின் போது, 6 மாதத்திற்கு முன்பே குவாரிகள் யாருக்கு என்று முடிவு செய்யப்பட்டுவிட்டதாக ஆளும் கட்சியினர் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய வட்டாரப்பகுதிகளில் உள்ள கௌல்பாளையம், தெரணி, பாடாலூர், கூத்தனூர், பேரளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 34 மலைகளில் கல் வெட்டி எடுக்கும் கல்குவாரி உரிமம் வழங்க இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமையில் பொது ஏலம் நடந்தது. அப்போது, ஏலத்தில் கலந்து கொள்ள ஏராளமான அதிமுகவினர் தங்கள் ஆதரவாளர்களுடன் வந்திருந்தனர். பொது ஏலம் என்றாலும் சம்மந்தப்பட்ட மலைக்குவாரிகள் அனைத்தும் கடந்த 6 மாதத்திற்கு முன்பே யாருக்கு என்று முடிவு செய்து, ஆளும் கட்சியினர் பட்டியல் கொடுத்து விட்டதாக கூறப்பட்டது. இதனை உண்மையாக்கும் வகையில், இன்று நடந்த பொது ஏலத்தின் போது, முடிவு செய்யப்பட்ட நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் மற்றவர்களுக்கு அனுமதியில்லை என்று கூறி, ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்ற அதிமுகவினர் கூறிக்கொண்டிருந்தனர். அப்போது பேரளியை சேர்ந்த ஆளும்கட்சி ஒப்பந்ததாரர் அழகன் மற்றும் செல்வகுமார் ஆகியோர், தங்கள் ஊர் குவாரியை ஏலம் எடுப்பதற்கு வந்திருப்பதாக கூறி உள்ளே நுழைய முயன்றார். வாயில் பகுதியை மறித்து நின்ற அதிமுகவினர் கடந்த 6 மாதத்திற்கு முன்பே மலைகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது. அப்போது எங்கே சென்று இருந்தீர்கள் இங்கு வந்து சத்தம் போட கூடாது வெளியே செல்லுங்கள் என்று கூறி தடுத்தனர். இதனால் அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைக்களப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் போலீசார் செவ்வதறியாது நின்றனர். இதனையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிள் சிலர் ஓடிவந்து செய்தியாளர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் எனவே அமைதியாக இருங்கள், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்து அனைவரையும் அமைதி படுத்தினார். அரசு சார்பில் முறையாக ஏலம் நடத்தி, அரசுக்கு வருவாய் ஏற்படுத்தாமல் ஆளும் கட்சியினர் 6 மாதத்திற்கு முன்பே முடிவு செய்த பட்டியலை வைத்துக்கொண்டு பொது ஏலம் நடத்துவதை போல அதிகாரிகள் நாடகமாடுகின்றனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரம்பலூர் செய்தியாளர்,

வசந்தகுமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here