ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3ஆம் இடம்!

0
653

இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம்.

இந்தியாவில் ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டெர்நேஷனல் என்ற நிறுவனம், ’இந்தியா ஊழல் ஆய்வு 2018’ என்ற தலைப்பில் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

நாடு முழுவதும் உள்ள 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களில் அரசு சேவைகளை பெறுவதில் பொதுமக்களிடம் பெறப்படும் லஞ்சம் குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக ஊழல் அதிகம் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஆய்வில் கலந்து கொண்ட மக்களில் 59% பேர் அரசு அலுவலகங்களில் தங்கள் வேலைகளை முடிப்பதற்கு லஞ்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். அதில் 38% பேர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஓரிரண்டு முறை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், 21% பேர் பல முறை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் மாநிலத்தில் 56% மக்களும், தமிழகத்தில் 52% மக்களும் லஞ்சம் கொடுத்து அரசு அலுவலகங்களில் தங்கள் வேலைகளை முடிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிலும் உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தில், பெரும்பாலும் அரசு பதிவு அலுவலகங்களில் தான் லஞ்சம் பெறுவது நடைபெறுகிறது. அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் அதிகமாக லஞ்சம் வாங்குவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஊழல் குறித்த இந்த தேசிய அளவிலான ஆய்வு 215 மாவட்டங்களில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வடகிழக்கு, சிக்கிம், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஓடிசா, ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இந்த ஆய்வு நடத்தப்படவில்லை என்று டிரான்ஸ்பரன்சி இன்டெர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த அக்‌ஷய் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், அரசு அலுவலகங்களை கணினி மயமாக்குவது என்பது ஊழலை ஒழிக்க உதவாது. லஞ்சம் வாங்கும் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அங்கு சிசிடிவி இல்லை.

கடந்த சில வருடங்களாக காவல்துறையினர் லஞ்சம் பெறுவது குறைந்து வருகிறது. ஆனால் இதுபோன்ற அரசு பதிவு அலுவலகங்களில், லஞ்சம் பெறும் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஆய்வில், 30% பேர் காவல்துறைக்கும், 27% பேர் சொத்து பதிவு செய்யவும், லஞ்சம் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த வருடம் 25% பேர் காவல்துறைக்கும், 18% பேர் முனிசிபாலிட்டிக்கும், 30% பேர் சொத்து பதிவு செய்யவும் லஞ்சம் கொடுத்துள்ளனர்.

அரசு அலுவலகங்களில் தங்கள் வேலையை முடிப்பதற்கு 22% பேரும், விரைந்து முடிப்பதற்கு 36% பேரும் லஞ்சம் கொடுக்கின்றனர். எனினும், உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்கள் ஊழலை தடுப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆய்வில் கலந்து கொண்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். அப்படியே சில நடவடிக்கைகளை எடுத்தாலும், அதிகாரிகள் ஊழலை தடுக்கவில்லை என 34% மக்கள் கூறுகின்றனர் என்று டிரான்ஸ்பரன்சி இnடெர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த அக்‌ஷய் குப்தா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ஊழல் குறித்து, சி.எம்.எஸ். இந்தியா என்ற தனியார் நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், ஊழல் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here