திருச்சி அருகே மணல் திருட்டுக்கு உதவிய பெண் வட்டாட்சியரை கிராம மக்கள் சிறைபிடித்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி கொள்ளிடம் ஆற்றில் தினசரி இரவு மணல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாட்சியர் ரேணுகாதேவியிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த வட்டாட்சியரிடம், வழக்கறிஞர் திவாகர் என்பவர், மணல் திருட்டில் ஈடுபட்ட 3 லாரிகள், ஒரு பொக்லைன் ஆகியவை தப்பிச் செல்வதாக புகார் அளித்துள்ளார்.
ஆனால் வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து 40க்கு மேற்பட்ட கிராமத்தினர் அங்கு வந்து மணல் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் நந்நகுமார் ஆகியோரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனிடையே, மணல் திருட்டுக்கு வட்டாட்சியரே உதவியதாகவும், அவர்மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் திருவாசி கிராமத்தை சேர்ந்த விவசாய ஒருங்கிணைப்பு குழு தலைவர் அன்புசெழியன் புகார் அளித்துள்ளார்.